தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின்  வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மற்றோரு காரில் வருகைத்தந்திருந்த இரு துப்பாக்கி தாரிகள்  குறித்த தமபதியினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி  அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.  சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் காரினுள்ளே உயிரிழந்தனர். இவ்விடயம் தொடர்பில்  மேல் மாகாண தெற்கு  மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,  துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதியே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படத்தில் உள்ள சந்தேகநபர் களு ஆராய்ச்சி லியனகே நிலுக்ஷ வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வீரசிங்க மலர்ச்சாலை, பரகொட, இமதுவ என்ற முகவரியைச் சேர்ந்தவர் என்றும், அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 199714103549 என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பவத்தை அடுத்து குறித்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறியக்கிடைக்கும் பட்சத்தில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு அத்தியட்சகர் 071-8592279, பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  071-8596065,  ஆகியோரின் இலக்கத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.