தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கடந்த ஜூன் 17ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், புதன்கிழமை (24) அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் 43 வயதுடைய இந்த நபர், வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன் போது, அவருடன் தங்கியிருந்த அவரது சட்டப்பூர்வ மனைவி என நம்பப்படும் 35 வயதுடைய பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சாவகச்சேரியில் வைத்து  யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும், வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து புதன்கிழமை (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் கண்டி, குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸாரின் விசேட பொலிஸ் குழவினர் குண்டசாலை பகுதிக்கு சென்று குறித்த நபரை கைது செய்துள்ளதாக நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்ட இந்த சாரதியின் நண்பர் என்பதுடன் சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடகவே குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 17ஆம் திகதி மாலை, வெலிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய, அம்பாறை வைத்தியசாலையின் முன்னாள் பௌத்த மத போதகரான பெண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில், உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே சடலம் குறித்து தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறித்த பெண் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

கனடிய குடியுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 1.5 கோடி ரூபாவை இந்த சந்தேகநபர் ஏமாற்றியுள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலுக்குள்ளான அப்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

ஜூன் 16 அன்று நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் அவர் சுய நினைவிழந்த நிலையில், இச்சந்தேகநபர் அவரைத் தனது மற்றொரு காதலிக்குச் சொந்தமான காரில் ஏற்றிச் சென்று, பின்னர் சடலமாக கைவிட்டு தப்பியோடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தீவிர 'கசினோ' சூதாட்டப் பிரியர் என்பதும், வெவ்வேறு பெயர்களில் சமூகவலைத்தளங்கள் மூலம் பெண்களைத் திருமணப் போர்வையில் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய ஒரு தேடப்படும் குற்றவாளி என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் திருமணப் போர்வையில் ஏமாற்றி 11,873,000 ரூபா பணம் மோசடி செய்தமை மற்றும் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டமை தொடர்பான வழக்கும், அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் இதே பாணியில் ஏமாற்றியதாக 1,721,000 ரூபா மற்றும் 1,376,000 ரூபா பெறுமதியான இரு வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இது தவிர, வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 2,200,000 ரூபாவை ஏமாற்றியமை தொடர்பான வழக்கு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 4,200,000 ரூபாவை மோசடி செய்தமை தொடர்பான வழக்கு அளுத்கம நீதிவான் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளன.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகள் அளுத்கடை, ஹொரண மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு விதத்தில் நிகழ்ந்த மரணமா என்பதைத் தீர்மானிப்பதற்காகவும், நிதி மோசடிகள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.