நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மொத்தம் 9,613 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக 1,554 முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளன.

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 114 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்முறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில், வன்புணர்வு சம்பவங்களுடன் தொடர்புடைய 169 முறைப்பாடுகளும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 8 முறைப்பாடுகளும், சிறுவர் கடத்தல் தொடர்பில் 40 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் சிறுவர்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் 37 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வதைத்தல் தொடர்பில் 1,889 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில், இளம்பருவக் கருத்தரிப்பு தொடர்பாக 51 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணங்கள் தொடர்பாக 9 முறைப்பாடுகளும், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன், இணையவழிச் சிறுவர் வன்முறைகள் தொடர்பில் 196 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறைகள் தொடர்பில் 46 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.