தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் 2.5 பில்லியன் டொலர் மக்கள் பணம் மாயம்
Ad Space
Ad Space
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, கடந்த ஆட்சி காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்வது போல் நாடகமாடி, அதைவிடப் பெரிய அளவில் பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டினார்.
கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக வரலாற்றில் எங்குமே இல்லாத நடைமுறையாக, 'சிவப்பு லேபல்' ஒட்டப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டிய 323 கொள்கலன்கள் எந்தவொரு சோதனையும் இன்றி துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இதில் இரண்டு கொள்கலன்களில் போதைப்பொருள் இருந்ததாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.
எஞ்சிய கொள்கலன்களில் ஆயுதங்கள் கூட வந்திருக்கலாம் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரம்மாண்ட மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாகவே இன்று மின்சாரக் கட்டணமும், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு, அதன் ஒட்டுமொத்த சுமை அப்பாவி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2.5 பில்லியன் டொலர் பணத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஏழை மக்களுக்கான 'அஸ்வெசும' நிதி உள்ளிட்டவை திட்டமிட்டுச் சூரையாடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தேவைப்படுவதால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் முனகிக்கொண்டிருக்க வேண்டாம் என்று சவால் விட்டு ஆட்சியைத் தொடங்கியவர்கள், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் எப்படி முனகப் போகிறார்கள் என்பதை இன்னும் சில வருடங்களில் வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் காண முடியும். அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பு இப்போதுதான் படிப்படியாகச் சூடேறி வருகிறது. மக்கள் இந்த யதார்த்தத்தைத் தங்களது சொந்த அனுபவத்தின் மூலம் முழுமையாக உணரும் வரை எதிர்க்கட்சியாகத் நாங்கள் பொறுமையுடன் கவனித்து வருகின்றோம் என்றார்.
Ad Space
Ad Space