தேயிலை பக்கற்றுகளில் மறைத்து, சட்டவிரோதமான முறையில் 'கொத்தல ஹிம்புட்டு' தாவரத்தை சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்திருந்த 46 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணியளவில் சீனாவிலுள்ள குன்மிங் நோக்கி பயணிக்கவிருந்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-714 என்ற விமானம் மூலம் அவர் வெளியேற முற்பட்டுள்ளார். இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் கடமையிலிருந்த சுங்க அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் சுமார் 21 கிலோகிராம் எடையுள்ள 'கொத்தல ஹிம்புட்டு' தாவரப் பட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை தேயிலை பக்கற்றுகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் அமுலிலுள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், 'கொத்தல ஹிம்புட்டு' என்பது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைசெய்யப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்களத்தின் பல்லுயிர் பெருக்கம், கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.