சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.50 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்ற போதே, சந்தேகநபரின் பொதிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, அவரது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், 2,000 நிகோடின் பக்கெட்டுகள், 50 மின்னணு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 5.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.