“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” - பெ.சண்முகம் வலியுறுத்தல்
Ad Space
Ad Space
Ad Space
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் இதுதொடர்பான மசோதா குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத் தொடரை அவர்கள் நடத்துவதென்று தீர்மானித்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது சரியல்ல.
மேகேதாட்டு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான கூட்டத்தை நடத்தாமல் தொகுதிமறுசீரமைப்பு தொடர்பாக மட்டும் தமிழக அரசு கூட்டம் நடத்தியிருப்பது ஏற்புடையதல்ல என்று திமுக தெரிவித்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழகத்துக்கான ஒருமித்த கருத்து அவசியம்.எனவே, திமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். தமிழகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்தும் முயற்சி சரியானது. அனைவரும் ஒன்றிணைந்து, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நடத்தும் நாடகத்தை முறியடிக்க வேண்டும்.
பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெறவில்லை. தற்போதுஅரசுத் துறைகளில் ஒப்பந்தம் மற்றும் மதிப்பூதியம் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர் முறையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பேருந்து முதலாளிகள் தன்னிச்சையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Ad Space
Ad Space
Ad Space