அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் சர்வாதிகார செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய தொழிற்சங்க உறுப்பினரான ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது. அச்சுறுத்தலுக்கு  தொழிற்சங்கத்தினர் அடிபணிய போவதில்லை.போராட்டத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த  தேசிய மக்கள் சக்தி இன்று மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறது.

வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) வியாழக்கிழமை  இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்    ஆறாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்  நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்களே தவிர தீர்வுகள் பற்றி  பேசுவதில்லை

 ஆளும் கட்சி தான் தற்போது ஆட்சியில்  உள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து   அரச சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்தி  நடவடிக்கைகளுக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக  1300 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.இருப்பினும் இந்த நிதியில் 30 சதவீதம் மாத்திரமே  செலவழிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பேச்சளவில் மாத்திரம் தான் முன்னேறியுள்ளது. செயலளவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசாங்கத்தின்  குறைப்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களுக்கு கிடையாது.மக்களையும், தொழிற்சங்கத்தினரையும் அடக்கும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் சர்வாதிகார செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய தொழிற்சங்க உறுப்பினரான ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது. அச்சுறுத்தலுக்கு  தொழிற்சங்கத்தினர் அடிபணிய போவதில்லை.

போராட்டத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த  தேசிய மக்கள் சக்தி இன்று  மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறது.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆளும் தரப்பின் ஊழல்வாதிகளை ஜனாதிபதி பாதுகாக்கிறார். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக வெகுவிரைவில் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்றார்.