மலையக தோட்டங்கள் தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி, தாெடர்ந்தும் அந்த ஒப்பந்தத்தை நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே மலையகத்தில் வீட்டுத்திட்டங்களை விரைவில் மேற்கொள்ள முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற  இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மழை வெள்ளம்  காரணமாக மலையத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்துக்கு முன்வைக்கின்றேன். அதேநேரம் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட குறிப்பாக நுவரெலியா மாவட்ட மக்கள் பலர்   தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்துவந்தனர். அவர்களை நாங்கள் பார்வையிடச் சென்றபோது, தங்களை ஏற்கனவே வசித்துவந்த, பாதுகாப்பற்ற இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு கால்துறை மற்றும் தோட்ட முகாமைத்துவம் மூலமாக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர்கள் எங்களிடம் முறையிட்டனர். அதனால் இவ்வாறு பாதுகாப்பற்ற இடங்களுக்கு  மீண்டும் அந்த குடும்பங்களை அனுப்ப வேண்டாம் என்றும் மீண்டும் புயல் போன்ற ஆபத்து ஏற்பட்டு, அந்த மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு யார் பொறுப்பு கூறுவது என நாங்கள் அன்று பாராளுமன்றத்தில் கேட்டிருந்தோம்.

தற்போது அவ்வாறானதொரு நிலையே ஏற்பட்டிருக்கிறது. சீரற்ற கால நிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 523 குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 6பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மக்களுக்கு அரசாங்கம்  விரைவாக நிவாரணங்களை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் நாங்கள் தமிழ் தரப்பாக  ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தோம். குறிப்பாக மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். இதுதொடர்பில் அவர் தெரிவிக்கும்பாேது, மலையகத்தில் இருக்கும் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு 10 பேர்ச் அடிப்படையில் காணி வழங்குவதாக இருந்தால் சுமார் 12 லட்சம் பேர்ச் தேவைப்படுகிறது. நாங்கள் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டி இருக்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதில் உண்மை இருக்கிறது.

என்றாலும் வளங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்காமல் இருப்பதாக தெரிவிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தளவு வளங்கள் முக்கியமோ அதேபோன்று அங்குள்ள மக்களின் காணி உரிமையும் முக்கியமாகும். இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியாகி, தங்களின் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறான நிலையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம்தான் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதனால் இந்த சபையில் உரையாற்றிய பெருந்தோட்டத்துக்கு பொறுப்பான அமைச்சர் சமன்த வித்தியாரதம்ன, தனது உரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நிசாரண திட்டஙகளை அறிவிப்பார் என்றே நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக கடந்த ஆட்சியாளர்களை குறைகூறிவந்தார். தித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேகாலையில் ஜனாதிபதி வீடுகளை வழங்க  நடவடிக்கை  எடுத்திருந்தார். அதேபோன்று மலையகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் வீடுகளை வழங்கவில்லை என கேட்கிறோம்.

ஏனெனில் ஏனைய பிரதேசங்களில் வீடுகளை கட்டுவதுபாேன்று மலையகத்தில் செய்ய முடியாது. அதற்கு தோட்ட கம்பனி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே அதனை மேற்கொள்ள முடியும். அதனால் தோட்ட கம்பனிகளுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி, தாெடர்ந்தும் அந்த ஒப்பந்தத்தை நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.