தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் ‘ கார்த்திகை வாசம் ’ மலர்க் கண்காட்சி மாவீரர் வார ஆரம்ப நாளான நேற்றுச் சனிக்கிழமை (21.11.2026) மாலை யாழ். நல்லூர்ச் சங்கிலியன் பூங்காவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழலியல் ஆலோசகர் கா.சோ.சிவநேசன் தலைமையில் கார்த்திகைப் பூச் சூடி ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகவும், இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கெளரவ விருந்தினராகவும், இந்திய வணிக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தொடக்க உரையையும், அரசியல் ஆய்வாளர் எம். நிலாந்தன் சிறப்புரையையும் ஆற்றினர். மேற்படி நிகழ்வில் நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா குழுவினரின் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும், இசைக் கலைஞர் பூவன் மதீசனின் எழுச்சிப் பாடல்களும் இடம்பெற்றன.நிகழ்வில் 100 மாணவர்களுக்குப் புதிய துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன.