அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருட காலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம்-09 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய மற்றும் மாகாண அரசசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.11.2026) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு தெரிவித்த மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே தமது நீண்டகாலத் தொழில்சார் பிரச்சினைகளுக்கு அடிப்படைத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.குறிப்பாக நியாயமான பதவி உயர்வுகள், சம்பள ஏற்றங்கள் உள்ளிட்ட தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசின் பல்வேறு மட்டங்களிலுள்ள பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் பல தடவைகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கோரிக்கைகள் எமது தரப்பால் முன்வைக்கப்பட்டன. அத்துடன் இதுதொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், இதுவரை எமது குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில் கடந்த 2026 ஒக்டோபர் மாதம்-11 ஆம் திகதி மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமையவே நவம்பர்-09 ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.