நவாலிப் படுகொலையின் 31 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு
vidiyel 12 ஆடி 2026 · 15:39 9 views
Ad Space
Ad Space
நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம், நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயம் ஆகியவற்றின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியானோரின் 31 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வியாழக்கிழமை (09.07.2026) மாலை-04.30 மணியளவில் யாழ்ப்பாணம் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய வளாகத்திலுள்ள நவாலிப் படுகொலை நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பொன்.மாஸ்டர், கட்சியின் நிதிப் பொறுப்பாளர் தீபன் திலீசன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நினைவுச் சுடர்கள் ஏற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, கடந்த-1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம்-09 திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி சின்னக் கதிர்காமம் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 350 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.