அம்பாறை - நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற மாணவரைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துக் காணாமல் போயிருந்த 23 வயதுடைய இளைஞரின் சடலம் இன்று சனிக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ள 19 வயதுடைய மற்றைய மாணவரைத் தேடும் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (20) ஐந்து மாணவர்கள் நிந்தவூர் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதன்போது, மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

அவ்வேளை கடற்கரையிலிருந்த  23 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கடலில் குதித்து ஒரு மாணவரைப் பாதுகாப்பாகக் காப்பாற்றியுள்ளார். பின்னர் மற்றைய மாணவரையும் காப்பாற்றும் நோக்கில் மீண்டும் கடலில் குதித்தபோது, அவரும் குறித்த மாணவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து, நேற்று முதல் இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து முன்னெடுத்து வந்த தேடுதல் நடவடிக்கையின் போது, மாணவரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் கடலில் குதித்த இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரையும் பணயம் வைத்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் நிந்தவூர் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.