நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடையுடைய பாண்களை விற்பனை செய்தல், அவற்றின் விலைகளை தெளிவான முறையில் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நுகர்வோர் அதிகார விவகார சபையினால் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டன.
இது குறித்த நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதாவது,
மேற்குறித்த சோதனை நடவடிக்கைகளில் 71 பேக்கரிகள் உட்பட 107 கடைகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது குறைந்த எடையுடைய பாண் விற்பனை தொடர்பாக 35 சம்பவங்களும், பாணின் எடையை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 85 பேக்கரிகளும், பாணின் விலையை தெளிவாக காட்சிப்படுத்தாத 55 பேக்கரிகளும் நுகர்வோர் விவகார சபை அதிகாரிகளால் கண்டறியப்பட்டன.
குறைந்த எடையை கொண்ட பாண் விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர்கள் தொடக்கம் அதனை உற்பத்தி செய்த பேக்கரிகள் உரிமையாளர்கள் வரையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பேக்கரி உற்பத்தி செயன்முறைகள் திருத்தி அமைக்கபட வேண்டும் எனவும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீதிவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் 1 முதல் 3 வரையிலாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிகடகைளில் 81 பேக்கரிகள் உள்ளிட்ட 118 கடைகளில் 54 எடை குறைந்த பாண் விற்பனை சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அதன்படி குறித்த இரு சோதனை நடவடிக்கைகளின் போதும் மொத்தமாக 225 பேக்கரி மற்றும் கடைகள் உள்ளடங்கலாக 89 எடை குறைந்த பாண் விற்பனை சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது போன்ற குற்றங்கள் தொடர்பாக, நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.