மத்திய கிழக்கின் போர்ச் சூழலை காரணமாகக் காட்டி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, வரிகளைக் குறைக்காமல் மக்களை அரசாங்கம் நசுக்கி வருகிறது. நிர்வாகத் திறமையற்ற இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வியாழக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் சமீபத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை மீண்டும் உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை இதற்குக் காரணமாகக் கூறுவது நகைப்புக்குரியது. சில வாரங்களுக்கு முன்பு வரை நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகக் கூறிய அரசாங்கம், இப்போது திடீரென விலையை உயர்த்தியிருப்பது மக்களைப் பாதிக்கும் செயலாகும்.
எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் போக்குவரத்துச் செலவு மட்டுமல்ல, அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவையும் கடுமையாகப் பாதிக்கும். எரிவாயு விலை 300 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதால் உணவகங்கள் முதல் வீட்டுத் தேவைகள் வரை அனைத்தும் விலை உயரும்.
தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம், அமைச்சர்களின் பைகளுக்கு இலாபம் செல்வதை தடுப்போம் என்று அவர்கள் மேடைகளில் முழங்கினர். ஆனால் இன்று அதே அரசாங்கம் வரிகளை நீக்கி மக்களுக்குச் சலுகை வழங்கத் தவறிவிட்டது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80-85 டொலராக இருக்கும்போது, அரசாங்கம் 100 டொலருக்கும் அதிகமான விலையில் கணக்கிட்டு மக்களை ஏமாற்றுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது அறவிடப்படும் அதிகப்படியான வரிகளை நீக்கினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.
மின்சார சபையை ஆறு பகுதிகளாகப் பிரிப்பது அதைத் தனியார்மயமாக்கும் முதல் முயற்சியாகும். தேர்தலுக்கு முன்பு மின்சார சபையை விற்கவோ பிரிக்கவோ விடமாட்டோம் என்று கூறியவர்கள், இன்று அதையே செய்துகொண்டிருக்கின்றனர். மேலும், நிலக்கரி கொள்முதல் செயற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அதன் சுமை மக்கள் மீதே சுமத்தப்படவுள்ளது.
அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் ஆதரவுடன் இருப்பதாக நினைத்தால், மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பார்க்க வேண்டும். நிர்வாகத் திறமையற்ற இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது. மக்கள் விரைவில் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
நிர்வாகத் திறமையற்ற இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியிலுள்ளனர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space