நொச்சியாகம பகுதியில் நீர் நிரம்பிய பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நபர், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் உள்ள நீர் நிரம்பிய பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடிப்பார்க்கச் சென்ற போதே குறித்த நபர் சடலமாகத் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய அந்தர குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த நபரின் சடலம் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.