சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இந்தச் சிகரெட் தொகையைக் கம்போடியாவில் இருந்து கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரை வந்தடைந்துள்ளனர்.
அங்கிருந்து ஏயார் ஏசியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 266 சிகரெட் கார்டூன்களில் அடைக்கப்பட்டிருந்த 53,200 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு இந்தியப் பிரஜைகளும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.