நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சில தரப்பினரால் பொதுமக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடிகளினால் சிலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசாக்களை (Work Visa) வழங்குவதில்லை எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் தொழில்நுட்ப மற்றும் உயர் திறன் சார்ந்த சில குறிப்பிட்ட வேலைவாய்ப்புகளுக்கு மாத்திரமே உண்மையான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஏனைய வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் போலியானவையாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெதர்லாந்து தூதரகம் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்புகளுக்காக எவ்வித ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் செலுத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் இலங்கையின் சட்ட அமுலாக்கப் பிரிவினரிடம் உடனடியாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.