கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் வீடுகளில் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில் 3.5 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிதாக வீடுகளில் கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவும் பயனாளர்களுக்கு, நிறுவப்படும் ஒவ்வொரு ஒரு கிலோவாட் (1 kW) மின்கல சேமிப்புத் திறனுக்கும் 25,000 ரூபா நிதி ஊக்குவிப்பு வழங்கப்படவுள்ளது.
இந்தச் சலுகையானது அதிகபட்சமாக 10 கிலோவாட் மின்கல சேமிப்புத் திறன் வரை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக 250,000 ரூபா நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 10 சதவீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை (PAL) நீக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வரி விலக்கு நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் சூரிய மின்கலங்களின் விலை குறைவதுடன், வீடுகளில் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்கான செலவுச் சுமையும் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஒரு கிலோவாட் மின்கலத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் குறையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிவாரணத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.