ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கு, அதன் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சையைத் தீர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது மற்றும் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது உட்பட, ஒரு அரசியல் கட்சியின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு பொதுச் செயலாளர் பதவி மிகவும் முக்கியமானது. இருப்பினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவே இருந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உட்கட்சி பிரச்சினை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன் பிரகாரம் தயாசிறி ஜெயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உட்கட்சி பூசல்கள் நிலவும் ஓர் அரசியல் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி இல்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் கோரப்படும் சந்தர்ப்பத்தில், உட்கட்சி பூசல்கள் உள்ள ஒரு கட்சியின் பிரதிநிதிகளை ஆணைக்குழுவின் முன் அழைத்து அப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான உடன்பாட்டிற்கு வர வேண்டும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளத் தவறினால், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை அக்கட்சி இழக்க நேரிடும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலும் எதிர்காலத்தில் இந்த நடைமுறைக்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. 

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கு, அதன் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சையைத் தீர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.