இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளுக்குதீர்வு கண்டிருக்கலாம்.மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட சொற்ப அதிகாரங்களை கடந்த அரசாங்கங்கள் மத்திய அரசுக்கு மீளப் பெற்றன. அவ்வாறு பெறப்பட்ட அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது. இந்த நாட்டில் இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடிய காலம் இருந்தது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாள குழுக்களின் அட்டூழியங்கள் அதிகமாக இருந்தன.
தமிழ் மக்கள் பாரதூரமாக கொலை செய்யப்பட்டனர். எதிர்த்து நின்ற தொழிற்சங்கங்கள் அடைக்கப்பட்டது.ஆனால் இன்று சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது.இந்த சூழ்நிலை நிலைத்து நிற்க வேண்டும்.
அரச சேவைகள் ஆணைக்குழுவின் முக்கிய பணியாக நியமனங்களை வழங்குதல் பதவி உயர்வுகளை வழங்குதல் ஆகியன காணப்பட்டன.
கடந்த ஆட்சிக் காலங்களில் இது அரசியல் தலையீடுகளை கொண்டதாகவே காணப்பட்டது. நியமனங்கள், இடமாற்றங்களின் போது அரசியல் தலையீடுகளே காணப்பட்டன. இவ்வாறு நடக்கும் போது இலஞ்சம் ஊழல் மோசடி என்பன கூடுதலாக காணப்பட்டன.
இலஞ்ச ஊழலை குறைக்க வேண்டுமாயின் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இப்போது பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்ந்து செல்லும் நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
17 வீதமானவர்களுக்கே வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கே இவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் 84 வீதமானவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமை கவலைக்குரியதாக உள்ளது. சம்பளம் குறைந்தவர்களுக்கே தேவைப்பாடுகள் அதிகமாக உள்ளன.
நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. இந்த நேரத்தில் ஏழைகள் மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கே சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும். ஒரு தரப்பினருக்கும் மட்டுமன்றி எல்லா தரப்பினருக்கும் சம்பள உயர்வை வழங்க வேண்டும்.
இதேவேளை இந்த அரசாங்கம் நல்ல விடயங்களை செய்கின்றது.வீண் செலவுகளை குறைத்து அமைச்சுக்களுக்கான அலுவலகங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ ஜனாதிபதிக்கான வதிவிடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் சம்பளங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 8.7 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக பார்க்கின்றோம்.
ஆனால் என்ன தேர்தல் முறை என்ற விடயத்தை நிர்ணயித்து சரியான முறையில் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வெளிநாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மிகுந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே கடந்த காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவை கடந்த கால அரசாங்கம் தவறாக வழிநடத்தியுள்ளது.
அரசாங்கமே அது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதாக இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரங்களை கொடுத்து சுயாதீன ஆணைக்குழுவாக இயங்க செய்ய வேண்டும். மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.
இதேவேளை மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் கல்வி சுகாதாரம் வன திணைக்களம் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தது. ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு அந்த விடயங்களை கையாளக் கூடாது. மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அவ்வாறே இருக்க வேண்டும்.
முந்தைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அதிகாரங்களை நீங்கள் மாகாணங்களுக்கு கொடுத்து தேர்தலை மிக விரைவாக நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.