சிறிலங்கா  ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட, மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு சனிக்கிழமை (14) அப்பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 800 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண் பரிசோதனையில் கலந்துகொண்டதுடன், மூக்குக் கண்ணாடிகள் தேவை என அடையாளம் காணப்பட்ட 526 மாணவ மாணவிகளுக்கு ஒரு மாத காலப்பகுதிக்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தின் Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியன இந்த வேலைத்திட்டத்திற்கு அனுசரணை வழங்குவதுடன், இதன் முதற்கட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் இரண்டாம் கட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, யாழ் மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி உள்ளிட்ட பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் பெருமளவான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.