2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக, முதலீட்டாளர்கள், பெரும் வர்த்தகர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் இலாபத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இதனால் நான்கு தரப்பினரே மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது ஏன் என மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டுகின்றன. ஒரு மாதத்துக்கான தொலைத்தொடர்பு பொதியைப் பெற்றாலும், மாதம் நிறைவடைவதற்கு முன்னரே தரவுகள் முடிவடைந்து விடுகின்றன. மீண்டும் பணம் செலுத்தினால்தான் சேவையைப் பயன்படுத்த முடிகிறது. முறையான சமிக்ஞை வசதிகள்கூட இல்லாத நிலையில், இந்நிறுவனங்கள் அளவற்ற இலாபம் ஈட்டுகின்றன. இதற்கிடையில், 38வீதம் வரிச்சுமையும் மக்களிடமே தொடர்கிறது.

இவ்வாறான நிறுவனங்களுக்கு புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கு நிர்மாணச் செலவில் 75 சதவீதம் அல்லது 35 மில்லியன் ரூபா ஆகியவற்றில் குறைந்த தொகையை மானியமாக வழங்கவும், மின்சார இணைப்புக்கு ஐந்து மில்லியன் ரூபா வழங்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்காக 9,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண மக்கள் ஒரு மாத மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால்கூட அவர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் மானியம் வழங்கப்படுவது ஏன்?

முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு வரிச்சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணமே அரசாங்கத்தின் பிரதான வருமானமாக இருக்கின்றது. அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், புரதத் தேவைக்கான உணவுப் பொருட்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படவில்லை. வேலையின்மைக்கும் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை. கடனைச் செலுத்த நாட்டில் தங்குமாறு கூறும் அரசாங்கத்தின் கீழ், இளைஞர்கள் இஸ்ரேலின் போர்ச்சூழலுக்கும் ரஷ்யாவின் கூலிப்படைச் செயற்பாடுகளுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தால் மகிழ்ச்சியடைந்த நான்கு தரப்பினர் உள்ளனர். முதலாவது, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த {ஹலங்கமுவ. வர்த்தக சபைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் கோரிக்கைகளுக்கு அமைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.

இரண்டாவது, ஹன்சி ஜயசூரிய. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கோபுர நிர்மாணத்துக்கு அரசாங்கம் நிதி வழங்குவதால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

மூன்றாவது, டட்லி சிறிசேன. விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரச பொறிமுறை இல்லாமல், தனியார் பங்காளித்துவத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நான்காவது, சர்வதேச நாணய நிதியம். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படுகிறது. தற்போதைய திட்டத்தை நிறைவு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.

எனவே, சாதாரண மக்களின் நலன்களைவிட நிறுவனங்களின் இலாபத்துக்கே இந்த வரவு செலவுத் திட்டம் முன்னுரிமை வழங்கியுள்ளது என்றார்.