பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இடைக்கால பாதிப்பு மண்டலமாக, 36 சர்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டு மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ), பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளைச் சுற்றி சுமார் ஒரு கிமீ சுற்றளவுக்கு
எந்தவொரு கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து கடந்த 2025 அக்டோபரில் உத்தரவிட்டது.இந்த உத்தரவால் பள்ளிக்கரணை பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமானப்பணிகள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களும் கட்டக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்பிரமணியம், ‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள இடைக்கால பாதிப்பு மண்டலமாக வரையறுக்கும் வகையில், 36 சர்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான அறிக்கையை அக்.14-க்குள் தாக்கல் செய்ய வேண்டுமென மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். அந்த அறிக்கையை பரிசீலித்து அக்.14 அன்று இந்த வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
அன்புமணி வலியுறுத்தல்
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கிமீ நீளத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வரையறை செய்ய வேண்டும். தடுப்புச் சுவர், நடைபாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்’’ என்றார்.