நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகள் காரணமாக அச்சமடைந்துள்ள பழைய அரசியல் ஊழல்வாதிகளும் கடத்தல்காரர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.

சோசலிச இளைஞர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் நடத்தும் இளைஞர் மாநாடு கடுவலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக சட்டமும் நீதியும் மிக உயரிய மட்டத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது புதல்வர்கள் மற்றும் உறவினர்கள் என முழு குடும்பத்தினரும் இன்று நீதிமன்றங்களுக்கு முன்னால் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உத்தமர்களைப் போல வேடமிட்டு ஆன்மீக போதனைகளை வழங்கிய விஜேதாச ராஜபக்ஷ போன்ற அரசியல்வாதிகளின் புதல்வர்கள் இன்று பாதாள உலகக் குழுக்களிடம் லஞ்சம் பெற்று சிறைச்சாலைகளுக்குச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் தயாசிரி ஜயசேகர போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாட்டைப் பற்றியோ தார்மீகத்தைப் பற்றியோ சிந்திக்காது, வெறும் திருடர்களையும் ஊழல்வாதிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிராக கூட்டுச் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய ஊழல் கறையடிந்த குப்பைக் குவியல்களை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்து நாற்றமடிக்கும் பழைய கலாசாரத்தை உருவாக்கவே எதிர்க்கட்சித் தரப்பு முயற்சிக்கின்றது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பான சுரேஷ் சலே போன்ற நபர்களை முன்னிலைப்படுத்தி தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் நாடகமாடினர்.

எனினும், அந்த நாடகங்கள் அனைத்தும் இன்று அம்பலமாகியுள்ளன. வரலாற்றில் முதல் முறையாக 5 இற்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிணையில் வெளிவந்து பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தனை வருடங்களாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்பட்ட வழக்குகள் யாவும், தற்போதைய அரசாங்கத்தின் சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதிமன்றங்களின் துரித தலையீட்டினால் வெறும் 6 மாதங்களுக்குள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனாலேயே நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் தமக்கு இரவு நேரங்களில் கெட்ட கனவுகள் வருவதாகக் கூறி அஞ்சி நடுங்குகின்றனர். நோயாளிதான் பதற்றமடைந்துள்ளார், எனவே மருத்துவர்களாகிய நாம் பதற்றமடையத் தேவையில்லை.

இந்த நாட்டின் பழைய அரசியல் கலாசாரத்தில் காணப்பட்ட சலுகைகளுக்காகவும், உணவுப் பொதிகளுக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் அடிமைத்தனத்தை இன்றைய இளைஞர் சமுதாயம் முழுமையாக ஒழித்துக் கட்டியுள்ளது.

பழைய ஊழல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தத் துடிக்கும் இவ்வாறான மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக, இளைஞர் சமுதாயம் விழிப்புடன் இருந்து மக்கள் கொள்கையை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.