நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தச் செயன்முறையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என மக்கள் தொழில் வல்லுநர் மையம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு மேற்கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்த முயற்சி குறித்து கொழும்பில் அமைந்துள்ள மக்கள் தொழில் வல்லுனர் மையத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த மையத்தின் சட்டத்தரணி ருக்மல் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் 76 வருட வரலாற்றில், 1948 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்கள் தங்களுக்குச் சாதகமாக நீதிபதிகளை நியமிக்கும் பணிகளில் அரசியல் தலையீடுகளைச் செய்துள்ளதால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது.

1948 இல் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தகுதியான ரெஜினால்ட் டயஸ் பண்டாரநாயக்கவை புறந்தள்ளி, சட்டமா அதிபர் ஏலன் எட்வர்ட் ரோஸை பிரதம நீதியரசராக்கினார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலங்களில் கீழ் நீதிமன்றத்தில் இருந்த உறவினர் பிரான்ஸ் ரத்வத்த உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியில் அரசியலமைப்பைத் திருத்தி, நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியில் இருந்த அரச சட்டத்தரணி நெவில் சமரகோனை பிரதம நீதியரசராக்கினர்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் சிரேஷ்ட நீதிபதி மார்க் பெர்னாண்டோ புறக்கணிக்கப்பட்டு சரத் என்.சில்வா நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தங்களுக்குச் சாதகமாகச் செயற்படவில்லை என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க குற்றப்பிரேரணை மூலம் பலவந்தமாக நீக்கப்பட்டார்.

இந்தச் சாபக்கேடான அரசியல் கலாசாரத்தை ஒழிப்பதாகக் கூறியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆனால் இந்த அரசாங்கமும் பழைய ஆட்சியாளர்கள் பயணித்த அதே பாதையிலேயே தற்பொழுது பயணிக்கத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் தனக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கும் வேண்டியே இந்த அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு தற்பொழுது உறுதிப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மை பலத்தை வழங்கியது, தங்களின் அதிகாரத் தேவைக்கேற்ப அரசியலமைப்பைத் திருத்தி விளையாடுவதற்காக அல்ல. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால், தற்போதைய தற்காலிகத் தேவைக்காகவும் குறுகிய அரசியல் பயனுக்காகவும் அவசரமாக அரசியலமைப்பைத் திருத்த முற்படுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற செயலாகும். எனவே, நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த அரசியலமைப்பு திருத்தச் செயன்முறையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றார்.