71 வயதுடைய பாப்பரசர் லியோவுக்கு வலது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா எனப்படும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது கண்டறியப்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, பாப்பரசர் லியோ ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாப்பரசரின் பிரதான அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஸ்டெஃபானோ மார்கரிடோரா மற்றும் தனிப்பட்ட வைத்தியர் லூயிஜி கார்போன் ஆகியோர் தெரிவிக்கையில், சுமார் 90 நிமிடங்கள் நீடித்த அறுவை சிகிச்சை எவ்வித சிக்கல்களுமின்றி வெற்றிகரமாக நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நோயைக் குணப்படுத்தும் நோக்கில், காணொளி உதவியுடனான அறுவை சிகிச்சை நுட்பத்தைப் பயன்படுத்தி வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்டியின் அளவு மற்றும் புற்றுநோய் நிணநீர் கணுக்களுக்குப் பரவியுள்ளதா என்பது தொடர்பான முழுமையான தகவல்களை வாடிகன் உடனடியாக வெளியிடவில்லை.
ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் நுரையீரல் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஸ்டீபன் லியூ தெரிவிக்கையில், இறுதிப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயின் நிலையைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.