யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு , மூன்று தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ,நேற்று புதன்கிழமை (11) மீண்டும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .
சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் சென்ற "பென்ஸ்" ரக காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன்போது காரினுள் நக்கிள்ஸ் கிளிப் , மான் கொம்பில் கைப்பிடி செய்த வாள் என்பவற்றுடன் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து காரில் பயணம் செய்த இருவரையும் பொலிஸ் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இருவரும் அரசடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் , ஒருவர் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகி , கடந்த 3 தினங்களுக்கு முன்னரே , யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
கைதான இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.