பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது அவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் பரவியுள்ளது.
பாரிஸில் உள்ள 'பிளேஸ் டி லா ரீபப்ளிக்' (Place de la République) பகுதியிலிருந்து பதின்ம வயது இளைஞர்கள் திரளாக அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
பாடசாலைகளுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் என்றும், பாதுகாப்புத்துறையின் அடக்குமுறையைக் குறைக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
லியோன் நகரில் பாதுகாப்புத் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாரிஸ் மற்றும் மார்சேய்ல் (Marseille) நகரங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளும், ரென்னெஸ் (Rennes) நகரில் நீர்த்தாரைகளும் பிரயோகிக்கப்பட்டன. இருப்பினும், முந்தைய போராட்டங்களை சீர்குலைத்த அளவிலான தீவிர வன்முறைகள் எதுவும் இதில் நிகழவில்லை.
போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 215 மாணவர்களும், 85 ஊழியர்களும், 715 பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளதோடு, நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு கண்டனமும் வெளியிட்டு வருகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (6) பிரான்ஸ் நாட்டில் உள்ள 891 உயர்நிலைப் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் நடைபெறவில்லை என்றும் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போராட்டங்களில் பங்கெடுத்ததாகவும் கூறப்படுகிறது.