டிக் டொக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களை16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இணையவழியில் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நள்ளிரவு நேரத்தில் அவர்கள் தொடர்ந்து கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய திட்டமாக அமையும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவு குறித்து பேசிய பிரதமர் ஸ்டார்மர், முழுமையான தடை விதிப்பதே சரியான தேர்வாகும்" என்று குறிப்பிட்டதோடு, குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு இது மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்தே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த ஆலோசனையின் போது, என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இக்கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் இந்தத் தடை உத்தரவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இருப்பினும், இந்தத் திட்டம் இன்னும் பல புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும் என சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு பிரசாரகர்கள் எச்சரித்துள்ளனர்.