சிறிலங்காவின்  பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் 2027இல் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக அந்தச் சலுகை கைநழுவிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சலுகையை இழப்பது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும், குறிப்பாக ஆடைத் துறை சார்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று சட்டத்தரணி மனித உரிமை செயற்பாட்டாளர் தருஷி திஷாரா பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  புதன்கிழமை  (21) சமூக மற்றும் சமய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத முதுகெலும்பாக விளங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு முரணான வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கும் ஒடுக்கமுறைச் சட்டங்கள் காரணமாக அந்தச் சலுகை இலங்கைக்குக் கிடைப்பதில் தீவிர சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சலுகை மூலம் அதிகளவான பயன்களை பெற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றவாது இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்ட போது, மனித உரிமைகள், தொழிலாளர் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேசக் கொள்கைகளை மதித்து நடப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை நிறைவேற்றும் போது, சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுடன் இணங்கிச் செல்லத் தவறி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளன.

இத்தகைய சூழலில், இந்தச் சலுகையை இழப்பது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலையங்களை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.  எனவே, அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகாரத் பிரயோகத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து, அவர்களை அச்சுறுத்தும் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பையும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நாட்டின் சட்டக் கட்டமைப்புகளை மாற்றியமைத்து, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது  என வலியுறுத்தினார்.