சிலாவத்துறை கல்லாறு கடற்பரப்பில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பீடி இலைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டமை கண்டறியப்பட்டு, ஒரு தொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரிடம் நேற்று (7) இரவு சிக்கியுள்ளனர்.

இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால், சிலாவத்துறைக்கு அப்பால் கல்லாறு கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது, குறித்த படகில் 20 உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 690 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், சந்தேக நபர்கள் இருவர் மற்றும் குறித்த ஒரு டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 34 மற்றும் 41 வயதுடைய ஆனவாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சந்தேக நபர்கள், பீடி இலைகள் அடங்கிய தொகை மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.