புகையிரத சேவையை நவீனமயப்படுத்த, 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், 2027-2029 ஆண்டுகளுக்காக பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 20, 609 ஆக காணப்படுகின்ற நிலையில், 2026.03.31 ஆம் திகதி நிலவரப்படி 14,908 பேர் சேவையில் உள்ளார்கள்.
புகையிரத பாதைகள் தனியார் துறையினருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளப்படவில்லை.திணைக்களத்திற்குச் சொந்தமான மொத்த சொத்துக்களின் அளவு மற்றும் பெறுமதியானது 2025.12.31 ஆம் திகதி மதிப்பீட்டிற்கமைய, 915,985,414,794 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன்,2027-2029 ஆண்டுகளுக்காக பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு புறநகர் புகையிரத திட்டம்,களனி பாலத்தை நவீனமயமாக்கல், 10 புகையிரத பாலங்களை மறுசீரமைத்தல் மற்றும் பதிலீடு செய்தல் (கொம்பனித்தெரு,நாரஹேன்பிட்ட, அளுத்கம, இந்துருவ, கிந்தோட்டை, தொடந்துவ, வெள்ளவத்தை, பிங்வத்தை,ஹிக்கடுவை, பாணந்துறை ஆகிய பாலங்கள்)
இலங்கை புகையிரத சேவைக்காக 05 சக்தித் தொகுதிகளை கொள்வனவு செய்தல் மற்றும் 05 டீசல் மின்சார எஞ்சின்களைக் கொள்வனவு செய்தல்,குருநாகல் - பொல்கஹவெல இரட்டைப் பாதை திட்டம்,மருதானையிலிருந்து இரத்தினபுரி வரையிலான களனிவெளி புகையிரத பாதையை அபிவிருத்தி செய்தல்,
புதிய 05 எஞ்சின்கள் மற்றும் புறநகர் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 05 இலகுரக புகையிரதத் தொகுதிகளைக் கொள்வனவு செய்தல்,புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் மற்றும் தரப்படுத்தும் திட்டம்,இரத்மலானை 27 மற்றும் 28 தொழிற்கூடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
கொழும்பு புறநகர் புகையிரத சேவைகளை நவீனமயமாக்கி, பொதுமக்களுக்குப் பயனளிக்கும், வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்துச் சேவையை வழங்குவதன் மூலம் புகையிரதத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, கண்டி புறநகர் புகையிரத திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய புகையிரத எஞ்சின்களை சேவையில் இணைத்தல், புகையிரத பாதைகளைப் புனரமைத்தல், புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் மற்றும் தரப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், ஈ-டிக்கெட் முறையை மேலும் மேம்படுத்துதலுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.