இலங்கையில் தற்போது சுமார் 678,000 சாரதி உரிமம் (Driving License)அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தினசரி அச்சிடும் திறன் சுமார் 4,600 உரிமங்களாக இருப்பதால், நிலுவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, நாடாளுமன்ற குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாமதத்தை சரிசெய்ய, அக்டோபர் 15ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் தினசரி அச்சிடும் திறன் சுமார் 8,200 உரிமங்களாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையிலான இக்குழு, சாரதி உரிமங்கள் மற்றும் வாகனப்பதிவு தகடுகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து முறைப்படி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணிகள், மற்றும் தொடர்புடைய ஒப்பந்தப்புள்ளி மற்றும் கொள்முதல் செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 10, 2026க்குப் பிறகு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போது 14 நாட்களுக்குள் வாகனப்பதிவு எண்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், மோட்டார் போக்குவரத்துத்துறையில் உள்ள உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் அரச சேவைகளில் இதுபோன்ற தாமதங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.