ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய சட்டமூலம், பொலிஸாரிடம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு சட்டரீதியான சாட்சியப் பெறுமதியை வழங்குவதன் மூலம் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியது.

அத்துடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதுடன், தன்னுடன் இணங்காத அரசியல் தரப்பினரையும் அப்பாவி மக்களையும் அடக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதாகவும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்  இன்று புதன்கிழமை  (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நிலக்கரி மோசடியால் ஏற்படும் மின்வெட்டு, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு, உயர்த்தப்பட்ட வரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் ஏற்கெனவே அறிந்துள்ளனர். எனவே, வெளிப்படையாகத் தெரியாத வகையில் அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்கும் சட்ட நடவடிக்கைகள் குறித்து பேசுவது அவசியமாகும்.

ஒருவரைத் தாக்கி, அச்சுறுத்தி, வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றாலும், இலங்கையின் சாட்சியச் சட்டத்தின் கீழ் அவ்வாறான வாக்குமூலங்கள் தொடர்பில் சட்டப் பாதுகாப்புகள் உள்ளன. நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், சித்திரவதையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், பொலிஸாரின் அதிகாரத்தை நீதித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இவ்வேற்பாடுகள் அவசியமாகும்.

இந்த அரசாங்கத்துக்கு நேர்மையான எதிர்பார்ப்புகளுடனும் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் வாக்களித்த மக்கள், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய மற்றுமொரு சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.

அரசியல் தரப்பினரின் எதிர்ப்புப் போராட்டங்களைப் பார்க்கும்போது, பச்சை குத்தியவர்கள், நீண்ட தலைமுடியுடன் இருப்பவர்கள் அல்லது வெளித்தோற்றத்தில் முரட்டுத்தனமாகத் தெரிபவர்கள் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், ஒருவரின் வெளித்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை மதிப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல.

நாம் பயங்கரவாதிகள் அல்ல, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதால் இந்தச் சட்டங்கள் எமக்குப் பொருந்தாது என்று கருதக்கூடாது. இந்தச் சட்டமூலங்களில் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என நான் கருதுகின்றேன்.

விசாரணை நிறுவனங்கள் அரசியல்மயமாக்கப்பட்டு, அரசியல் எதிரிகள் ஒடுக்கப்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் ஒவ்வொரு குடிமகனும் வாசித்து அவற்றின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சட்டம் புரியாத இடங்களில் சட்டத்துறை நிபுணர்களிடம் விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதங்கள் இடம்பெறுகின்றன. அரசாங்கத்துடன் இணங்காதவர்களையும் அப்பாவி மக்களையும் ஒடுக்குவதற்குப் புதிய சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொட தொடர்பில் நிலக்கரி கொள்வனவு மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி மோசடியின் தாக்கத்தை மக்கள் மின்வெட்டின்போது உணர்வார்கள் என ஆரம்பத்திலேயே எச்சரித்தோம். தற்போது மின்வெட்டு ஆரம்பித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே காரணம் எனக் குற்றஞ்சாட்டுகின்றோம் என்றார்.