கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடு தல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, “லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை கைது செய்துள்ளனர்.
பொது நூலகத் துறை இயக்குநரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இதுதொடர்பாக ஆதாரங்களைத் திரட்டிய பரந்தாமனை முக்கிய சாட்சியாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஆ.தாமோதரன் வலியுறுத்தினர்.
இதையடுத்து நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை கண்காணிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தால் இந்த வழக்கையும் அங்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும்.
மதுரை அமர்வில் விசாரணை வரும் போது பரந்தாமன் தொடர்ந்த வழக்கு விவரத்தை போலீஸார் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை நவ.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.