பெருந்தோட்டக் காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் குத்தகைக்கு கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. தொழிற்சங்கங்களான எங்களுடனும் கலந்துரையாட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் அதிகளவிலான நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. குறிப்பாக டித்வா அனர்த்தத்தில் தகரமொன்று கழன்றாலும் 10 இலட்சம் ரூபா தருவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அந்த மக்களுக்கு வீடு அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அரசாங்கம் அறிவித்த நிவாரணமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. ரம்போடை, கந்தபொல, ராகல, மாத்தளை மற்றும் கண்டியில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரடங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பிலும் அதிகளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மலையகத்தில் வாழும் மக்கள் காணி உரிமையையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த மக்களுக்கு 10 பேர்ச்சர்ஸ் காணியை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு மனம் வரவில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் போது மலையக மக்கள் மீது அதிக அக்கறை காட்டுவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் வழமையாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது மலையக மக்கள் தொடர்பில் அதிக அக்கறையுடன் கதைத்தனர். லயன் வாழ்க்கை முறையை இல்லாமல் செய்வோம் என்றனர். ஆனால் அதனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இந்த மக்களுக்கு 7 பேர்ச்சர்ஸ் காணிகளில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு அதற்கான உரித்துகள் வழங்கப்பட்டன.

இதேவேளை மலையக மக்கள் 200 வருடங்கள் கடந்தும் இன்னும் லயத்திலேயே வாழ்கின்றனர். இந்த நிலைமை மாறி காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்றால் கட்சி அரசியல் பேதமின்றி ஒவ்வொருவரும் போராட முன்வர வேண்டும். அப்போதே காணி உரிமை நோக்கி செல்ல முடியும். இந்திய அரசாங்கம் நல்லாட்சி காலத்தில் 10ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை செய்வதற்கு உறுதியளிக்கப்பட்டது. 2020இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஆயிரம் வீடுகள்கூட அமைத்துக்கொடுக்கப்படவில்லை. 

இந்த அரசாங்கத்தினால் 3 வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் 400 வீடுகள்கூட கட்டப்படவில்லை. இந்திய வீட்டுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை மட்டுமே வரவு செலவுத் திட்டத்தில் காட்டுகின்றார்கள். ஆனால் அரச நிதியில் வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதேபோன்று 13ஆயிரம் மில்லியன் மலையக அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தேயிலை, தென்னை, இறப்பர் அபிவிருத்திக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெருந்தோட்டக் காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் குத்தகைக்கு கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தொழிற்சங்கம் என்ற ரீதியில் எங்களுடன் கலந்துரையாட வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மலையக மக்களுக்கான 10 பேர்ச்சர்ஸ் காணி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணிகள் உறுதியளிக்கப்பட வேண்டும். தரிசு நிலங்கள் மலையக இளைஞர்களுக்கு தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு சாதகமான முறையில் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

பெருந்தோட்ட பிரதி அமைச்சர் இங்கு உரையாற்றும் போது மலையக தலைவர்கள் ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்துள்ளனர் என்றும் தோட்ட பங்களாக்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர் என்றும், தோட்டக் காணிகளையும் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் நான் அவ்வாறு எதனையும் வைத்திருக்கவில்லை. உங்களுக்கு தெரிந்தால் அவர் யார் என்பதனை கூற வேண்டும் என்று பிரதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.