தென் அமெரிக்க நாடான பெருவில் நேற்று வெள்ளிக்கிழமை  (20) ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) உறுதிப்படுத்தியுள்ள தகவலின்படி, ஆண்டிஸ் மலைத்தொடரிலுள்ள ஜூனின் (Junín) பிரதேசத்தில், பூமிக்கு அடியில் 129 கிலோமீற்றர் ஆழத்தில் இப் பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்தது.

இதன் அதிர்வுகள் அந்நாட்டின் தலைநகர் லிமாவிலும் உணரப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர். அத்துடன், பாராளுமன்றக் கட்டிடத்திலிருந்து உறுப்பினர்கள் வெளியேறும் காட்சிகளும் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.

இதேவேளை, இப் பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.