நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டுபவர்களால் கடந்த ஐந்து மாத காலத்தினுள் மாத்திரம் நான்கு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாவுக்கு மேல் தண்டப் பணம்  நல்லூர்ப் பிரதேச சபைக்கு வருமானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் சிலர் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகளை நிறுத்தவில்லை. எனவே, காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும், குற்றச் செயல்கள் ஏற்படுவதனைக் குறைக்கும் முகமாகவும் மேலும் பல கண்காணிப்புக் கமராக்களினைப் பொருத்தும் நடவடிக்கையினை நல்லூர்ப் பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை (12.02.2026) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனைத் தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுக் கழிவு கொட்டுபவர்களை அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர்ப் பிரதேச சபையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இதன்மூலம் நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகளைப் போடுகின்ற செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளது.

எனவே, பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். மாறாகத் தங்களுடைய பொறுப்புணர்வினை உதாசீனம் செய்து பொது இடங்களில் குப்பைகளைப் போடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது சட்டவிரோதச் செயற்பாடு எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத் தருகின்றேன் என்றுள்ளது.