கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பப் போக்குகளுக்குப் பொருந்தும் வகையில், பொறியியல் கல்வி தொடர்பான முறையான கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இசுறுபாயவில் வியாழக்கிழமை (29) அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொறியியல் கல்வித் துறையானது பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல மாறாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரிவுகளை உள்ளடக்கிய விரிவான துறையாகும். இந்த அனைத்துத் தொழில்சார் தேவைகளையும் உள்ளடக்கும் வகையில் நாட்டின் மூன்றாம் நிலைக் கல்வி முறையை மறுசீரமைக்கப்படல் வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பப் போக்குகளைக் கருத்திற்கொண்டு, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பொறியியல் கல்வியைத் திட்டமிடும்போது நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கும் உள்நாட்டுக் கைத்தொழில்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தொழிற்கல்விப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுவதால், மூன்றாம் நிலைக் கல்வி முறையும் அதற்குப் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கமைய மாணவர்கள் கல்வியில் பிரவேசிப்பதற்கும், தேவையான சந்தர்ப்பங்களில் வேறு கல்விப் பாதைகளுக்குத் திசைமாறிச் செல்வதற்கும் இயலுமான நெகிழ்வான நடைமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்கள், கைத்தொழில் துறை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொண்ட பின்னர், அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் பொறியியல் கல்விக்கான தேசியக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.