யாழ்.புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம் பசுபதிப்பிள்ளை வீதியும், அவ் வீதியின் ஊடாகச் செல்கின்ற ஒழுங்கையொன்றும் புங்குடுதீவு ஜே- 25 கிராம சேவகர் பிரிவுக்கான கிராம முன்னேற்றச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கச் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகத்தின் நிதி உதவியில் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பமாகின்ற குறித்த வீதியில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக இரு பக்கமும் பற்றைகள் காணப்பட்டமையால் அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்பட்டிருந்த நிலையில் கிராம முன்னேற்றச் சங்கத்தினரிடம் பொதுமக்கள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.10.2026), திங்கட்கிழமை (19.10.2026) தினங்களில் குறித்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அவ் வீதியூடாகச் செல்கின்ற ஒழுங்கையொன்றும் பற்றைகளால் முழுமையாகச் சூழப்பட்டிருந்தமையால் போக்குவரத்து மேற்கொள்வது மிகவும் சிரமமாகக் காணப்பட்டமையால் குறித்த ஒழுங்கையும் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.