கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செல்வாநகர் முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாகச் செல்வாநகர் சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.
தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதாகவும், இதனால் சமூகச் சீரழிவுகள் அதிகரித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும், இளைஞர்களைப் போதைப்பொருள் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் உரிய திணைக்களங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் நிறைவில், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மகஜர் வாசிக்கப்பட்டது.


