அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த 'மது' எனப்படும் பெண் சந்தேகநபர், செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினராலும் இங்ஹினியாகல பொலிஸாராலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட தருணத்தில், சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் (10 கிராம்) 'ஐஸ்' போதைப்பொருளும், 10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சந்தேகநபர் நீண்டகாலமாக கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவரின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த எம். மதுஷானி திசாநாயக்க என்ற 28 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் அறிவுறுத்தலுக்கமைய, அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் நேரடிக் கண்காணிப்பில் அம்பாறைப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தநாராயண மற்றும் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கர, பொலிஸ் கொன்ஸ்டபிள்களான சஞ்சீவ (91287), சுனில் (95062), ரணசிங்க (89791) மற்றும் இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கொன்ஸ்டபிள்களான சமந்த (69262), பிரதீப் (69801), வசந்த (70307), பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் அமிதா (8387) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையைச் மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இங்ஹினியாகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேனக பண்டாரவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்காள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல் காரி 'மது' கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space