முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், இடம்பெற்ற மற்றுமொரு மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது.
குறித்த காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக வான்வழியாகக் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் தங்க ஆபரணத் தொகுதி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உறவினர் ஒருவரால் குறித்த தங்கத் தொகுதி நாட்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்போதைய நிதி அமைச்சராக பதவி வகித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய உத்தரவின்படியே தங்கம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமரத்ன எழுதியுள்ள Rajapaksha Company என்ற நூலிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போதைய சுங்க அமுலாக்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் வீரவீர மீது அழுத்தம் பிரயோகித்தே இந்தத் தங்கத் தொகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி மத்தள விமான நிலையத்திற்கு வந்த UC827 இலக்க விமானம் மூலமே இந்தத் தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் லசந்த ரூஹுனகே தனது நூலில் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.