யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுத்தப்படுவதையும், மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில், திட்டங்களின் முன்மொழிவுகள் அனுமதிக்காகவும் மற்றும் மதிப்பீட்டுக்காகவும் அறிக்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் இணைத் தலைமையிலும் இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
மாவட்டச் செயலர் ம. பிரதீபன் வரவேற்புரையாற்றிய இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மாகாண மற்றும் மாவட்ட மட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நிரல் அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும் கட்டாயமானது, அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உரிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் கண்டறிக
புவியியல் காண்
நகரங்களை ஆராய்க
செய்திகள் வாசியுங்கள்
அடுத்த ஆண்டில் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கவுள்ள நிலையில், அதனைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குத் திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இருக்க வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் துறைசார் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் சந்திரசேகர், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுவதுடன், மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இக்கூட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, அதிகாரிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது எனத் தெரிவித்த அவர், தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அதிகாரிகளுக்குப் பதிலாகப் பொறுப்புவாய்ந்த பிரதிநிதி ஒருவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தூரப் பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதையோ அல்லது உயர் அதிகாரிகளுடன் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதையோ காரணமாகக் கொண்டு கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இனிவரும் காலங்களில் இவ்விடயத்தில் எவருக்கும் விதிவிலக்கு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எவருக்கும் விசேட சிபாரிசுகள் வழங்கப்படுவதில்லை என்பதுடன், எவருக்கும் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுமில்லை என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டு தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான 'சமூக சக்தி' தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டது.அத்துடன், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. மொத்தம் 4,372 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வீதி வலையமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வீதிப் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வடிகால்களைப் பாதுகாப்பாக மூடுதல், பாடசாலைகளுக்கு அருகில் பாதசாரிக் கடவைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை நிறுவுதல் உள்ளிட்ட 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டச் செயலகம், மத்திய அரசுத் திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு, விவசாயம், கிராமிய வீதி அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுன்னாகத்தில் அமைந்துள்ள சுழலும் உயிரியல் சுத்திகரிப்பு ஆலையையும், நாவற்குழிக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு உயிரியல் சுத்திகரிப்பு ஆலைகளையும் கையளிப்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. அதேவேளை, நெடுந்தீவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குக் கடற்படையினரின் பங்களிப்புடன் எரிபொருளைக் கொண்டு செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துதல், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




