தங்கள் குடும்பத்தினருடன் செலவிடவேண்டிய பொன்னான தருணங்களை இழந்து, சமூகத்தின் நலனை தங்கள் குடும்பத்தின் நலனுக்கு மேலாக மதிக்கின்றனர். உலகையே அச்சுறுத்திய கரோனாதொற்றுக் காலத்தில் மருத்துவர்கள் ஆற்றிய தியாகம் ஈடு இணையற்றது. தங்கள் குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் பிபிஇ உடைகளை அணிந்து கொண்டு, மாதக் கணக்கில் மருத்துவமனைகளில் தங்கி,கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். பல மருத்துவர்கள் இந்த சேவையின் போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இன்று மக்களின் சராசரி ஆயுட்காலம் 72 முதல் 74 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 55 முதல் 59 ஆண்டுகளாக உள்ளது. அதாவது மக்களின் வாழ்நாளை நீட்டிக்க பாடுபடும் மருத்துவர்கள் தங்களின் வாழ்நாளை குறைத்து வருகின்றனர் என்பது தான் வருத்தமான உண்மை.
மருத்துவர்களின் ஆயுட்காலம் சராசரி மனிதனை விட குறைவாக இருப்பதற்கு தீவிரமான பணிசூழல், ஓய்வின்றி உழைப்பது, அதிக மன அழுத்தம் ஆகியன முக்கிய காரணங்கள் ஆகும். மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் இவர்கள், தங்கள் சொந்த ஆரோக்கியத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தவில்லை.
வளர்ந்த நாடுகளில் கூட ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 நோயாளிகளை தான் பார்க்கின்றனர். ஆனால் தமிழகத்திலோ எண்ணிக்கை வரம்பு இன்றி ஏராளமான நோயாளிகளை பார்க்கின்றனர். உதாரணமாக ஏழரை கோடி மக்கள் தொகையை கொண்ட இங்கிலாந்து நாட்டில் 1.85 லட்சம் மருத்துவர்கள் பணி செய்கின்றனர்.
ஆனால் கிட்டத்தட்ட அதே அளவு மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் மட்டுமே பணி செய்வது என்பது, எந்த அளவு பணிச்சுமை அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது. ஆனால், உரிய ஊதியம் மறுக்கப்படுவது மிகுந்த மன உளைச்சலை தருகிறது.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளதோடு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகத்தை தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடத்தில் நிலைநிறுத்தி வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கி கவுரவிக்க வேண்டும்.
அரசாணை 354-ஐ அமல்படுத்தி அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பேரிடரின் போது மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி, விரைவான நீதி மற்றும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு கேமராக்கள், அவசர கால அலாரம் மற்றும் தகுந்த காவலர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மருத்துவமனைக்கு நுழையும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு முறைகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்.
அதனால் மருத்துவர்கள் மட்டுமன்றி மக்களும் பெரிதும் பயனடைவார்கள். மற்ற அரசு ஊழியர்களை போல வாரத்துக்கு இரண்டு நாள் ஓய்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால், தமிழக சுகாதாரத்துறையை இன்னும் சிறப்பாக, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.