திறைசேரியை நிரப்புவதற்காக மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் அரசாங்கம் சூறையாடியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார். மாத்தறை மாவட்டத்தின் முலடியன பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை நடைபெற்ற கட்சியின் சபை உருவாக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று பாட்டாளி வர்க்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களித்த மக்கள் முன்னரை விட மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றோ, வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளது என்றோ எந்தவொரு அரசியல்வாதியாவது பெருமையோடு கூற முடிகிறதா? தங்களோடு அரசியல் செய்த மக்கள் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வாழ்கிறார்கள் என்று தற்போதைய அரசாங்கத்தால் கூற முடியுமா?

திறைசேரியை நிரப்பி உலக சாதனை படைத்திருப்பதாகவே பெருமை பேசுகிறார்கள். ஆனால், புதிய கைத்தொழில்களை உருவாக்காமல், மக்களின் அன்றாட உணவையும் உழைப்பையும் பறித்தே திறைசேரி நிரப்பப்பட்டது என்பதை அவர்கள் கூறுவதில்லை. நாட்டிலுள்ள சிறிய பெட்டிக்கடை முதல் ஏழை மக்களின் ரொட்டிக்கடை வரை அனைத்துக்கும் வரி விதித்தார்கள். மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம், எரிபொருள் விலை என அனைத்தையும் உச்சக்கட்டமாக அதிகரித்தார்கள்.

இவ்வாறு மக்களின் கைகளில் உள்ள பணத்தைக் குறைத்து, பொருட்களின் விலைகளை உயர்த்திவிட்டு திறைசேரியை நிரப்புவதாகக் கூறுகிறார்கள். திறைசேரி நிரம்பியது என்றால், அந்தப் பணம் அப்பாவி மக்களின் பைகளில் இருந்தும், அவர்களின் வீடுகளில் இருந்தும் குறைக்கப்பட்ட பணமாகும்.

இன்றைய கடுமையான வாழ்க்கைச் செலவை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அவல யுகம் நாட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரித் தரவுகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் தரவுகளைக் காட்டி உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது. ஆனால், உலக மகிழ்ச்சிக்குரிய நாடுகளின் சுட்டெண்ணில் நாம் எத்தியோப்பியாவுக்கு சற்று முன்னதாக 134 ஆவது இடத்தில் இருக்கிறோம் என்பதே கசப்பான உண்மையாகும்.

இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்கு உள்ள ஒரேயொரு தீர்வு 'தொழில்முனைவோர் அரசு' என்னும் கருத்தாக்கம் மட்டும்தான். உலகில் வளர்ந்த அனைத்து நாடுகளும், நமது அண்டை நாடான இந்தியா மற்றும் சீனா கூட இன்று இந்த தொழில்முனைவோர் அரசு முறையையே பயன்படுத்துகின்றன. இதற்காக நமது சர்வஜன அதிகாரம் கட்சி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. இதன் மூலமே நமது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து, எதிர்காலத் தலைமுறைக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்க முடியும் என்றார்.