பெருந்தோட்டக் கம்பனிகளுடனான ஒப்பந்தக் காலத்தை 2042 ஆம் ஆண்டுக்கு பின்னரும்   நீட்டிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தக் காலத்தை தொடர்ந்து நீட்டித்தால் மலையக மக்களுக்கு காணி வழங்கல் என்பது வெறும் கனவாகவே அமையும். அரசாங்கம் இந்த தவறை செய்யக் கூடாது என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற  2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது  தொப்புள்கொடி உறவான  மலையக  தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் நம்பியுள்ளார்கள்.இந்த அரசாங்கம் அவர்களுக்கு துரோகமிழைத்துள்ளது.

தேசிய  கடன்  மறுசீரமைப்பின்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் மீதான நிதிக்கு 16 சதவீதமளவில் வரி விதிக்கப்பட்டது. பெருந்தோட்ட மக்கள் இதனை தான் தமது இறுதிகால சேமிப்பாக நம்பியுள்ளார்கள்.

பெருந்தோட்ட மக்களின் இறுதி சேமிப்பின் மீது 16 சதவீதம்  வரி செலுத்துவதை தற்போதைய  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது கடுமையாக எதிர்த்தார் நாங்களும் எதிர்த்தோம்.ஆனால்  2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த 16 சதவீத  வரி விதிப்பு நீக்கப்படவில்லை. தமது சம்பளத்தில் ஒரு தொகை வரி அறவிடப்படுவதை மலையக மக்கள் அறியாமல் உள்ளார்கள்.14 சதவீதம் அறவிடப்படுகிறது இது முற்றிலும் தவறானது.

 2042 ஆம் ஆண்டு   பெருந்தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாமல் நீட்டிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தக் காலத்தை தொடர்ந்து நீட்டித்தால் மலையக மக்களுக்கு காணி வழங்கல் என்பது வெறும் கனவாகவே அமையும். அரசாங்கம் இந்த தவறை செய்யக் கூடாது என்றார்.