சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் என்பது மக்களிடம் பொய்யான கனவுகளை விதைக்கும் ஒரு செயல்முறையாகவே அமைகிறதே தவிர, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் முன்வைக்கும் நிதி ஒதுக்கீடுகள் இறுதியில் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரிக்கே செல்வதாகவும், எந்தவொரு உத்திசார் மாற்றமும் இன்றிப் பழைய முறையிலேயே நிதி கையாளப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை.

அநுராதபுர புனித பூமி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் குறித்து மக்கள் மத்தியில் தீவிர சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து புத்த சாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி சுனில் செனவியுடன் உயர்மட்டப் பகிரங்க விவாதமொன்றில் ஈடுபடத் தாம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு இம்மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் அவ்விவாதத்தைத் தவிர்த்து மௌனம் காப்பது அரசாங்கத்தின் மறைமுகத் திட்டத்தையே உறுதிப்படுத்துகிறது.

யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட அநுராதபுர புனித பூமி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலில் "வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த புனித பூமி" என்ற தொடரிலிருந்து "பௌத்த" என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் முன்வைக்காத நிலையில் ருவன்வலிசாயவைச் சுற்றி வேலிகளை அமைப்பதற்கும், புனித பூமியின் எல்லைகளை அதிகரித்து எதிர்காலத்தில் அதனைப் பல மதங்கள் வழிபடும் தலமாக மாற்றியமைப்பதற்கும் இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையில், அங்கு புதிய இராமாயண ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அல்லது தற்போதுள்ள இரு இந்து கோவில்களில் ஒன்றை இராமாயண கோவிலாக மாற்றுவதற்கான விரிவான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அநுராதபுரப் பகுதியில் காணப்படும் தொல்பொருள் சான்றுகளில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனைகளின் மூலம் இந்தியாவின் பிராமி எழுத்துக்களின் வரலாற்றை விடப் பழமையான, கிறிஸ்துவுக்கு முன்னர் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருள் சான்றுகள் வெளிவந்தால் பிராந்திய வரலாற்று ஆதிக்கக் கூற்றுக்களைப் பாதிக்கும் என்பதால் இலங்கையின் நிலத்தடி தொல்பொருள் உரிமைகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அநுராதபுர புனித பூமியின் தானசாலை வளாகத்தில் பௌத்த தேரர்களும் பொதுமக்களும் இணைந்து மிகவும் அமைதியான முறையில் மேற்கொண்ட சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றக் கட்டளையைப் பெற அரசாங்கம் முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.
 
பௌத்த நிகாயவிலிருந்து நீக்கப்பட்ட நபர் ஒருவருடன் இணைந்து, வீடுகளுக்குத் தீவைத்த வழக்குகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையிலுள்ள ஜே.வி.பியைச் சேர்ந்த குழுவினர் அங்கு வந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி பௌத்த சிலையைக் கைப்பற்றிச் சென்றதாகவும், இத்தாக்குதலின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உள்ள மகாநாயக்க தேரர்கள் உடனடியாகத் தலையிட்டு உரிய தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். தேசிய சுதந்திர முன்னணி என்ற வகையில் இந்த தேசிய மற்றும் சாசனப் போராட்டத்திற்குத் தேவையான முழுமையான அர்ப்பணிப்பையும் தலைமைத்துவத்தையும் வழங்கத் தாம் தயார் என்றார்.
 
மேலும், இந்திய விரிவாக்கவாதத்திற்கு எதிராகப் போராடிய ரோஹண விஜேவீரவின் கொள்கைகளுக்கு மாறாக, தற்போதைய அரசாங்கம் இந்திய ஆதிக்கத்திற்கு அடி பணிந்து, வெளிப்படைத்தன்மையற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் தரமற்ற இந்திய மருந்துகளை அனுமதித்தும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் மேலும் தெரிவித்தார்.