மலையக மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதே புரட்சிகர மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான புரட்சிகர மக்கள் சக்தியின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும், புதிய பொறுப்பாளர்களுக்கான பதவிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (28) தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மற்றும் தோட்ட மட்ட அமைப்பாளர்கள், தோட்டக் குழுத் தலைவர்கள், இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கட்சியின் எதிர்கால அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய பொறுப்பாளர்களுக்கான பதவிகளும், புதிதாகக் கட்சியில் இணைந்த அங்கத்தவர்களுக்கான பொறுப்புகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன்,
மலையக மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எமது நோக்கமும் சிந்தனையும் ஒருபோதும் பின்னடையவில்லை. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆரம்பத்தில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியாக எமது அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக் காலப்பகுதியில் எமக்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சின்னம் இருக்கவில்லை. இதனால், பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்புகள் வந்தன. எனினும், எந்தவொரு பதவியையோ சலுகையையோ பெற்றுக்கொள்வது எனது நோக்கமாக இருக்கவில்லை.
மக்களுக்குச் சேவையாற்றுவதுடன், தோட்டப் பகுதிகளில் வாழும் இளைஞர், யுவதிகளுக்கும் அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே எமது புரட்சிகர மக்கள் சக்திக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது.
மலையக அரசியல் வரலாற்றில் ஒரு பெண்ணினால் உருவாக்கப்பட்ட கட்சியாக புரட்சிகர மக்கள் சக்தி திகழ்கின்றது.
இன்று மலையக மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று காணி உரிமையாகும். தோட்டப் பகுதிகளில் தொழில் வாய்ப்பற்றவர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேறுமாறு தோட்ட நிர்வாகங்கள் கடிதங்களை அனுப்புகின்றன. இவ்வாறான நிலைமைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமாயின் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும்.
காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
இந்த ஆண்டின் இறுதியில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரிக்கக்கூடும். தற்போதுள்ள பொருட்களின் விலைகளைக்கூடச் சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாகக் கேள்வி எழுப்பும்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகப் பதிலளிக்கின்றனர். அதேபோன்று, மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரும்போது, அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆனால், சுமார் 14 இலட்சம் பேருக்கு அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எமது மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு முறையாகக் கிடைக்க வேண்டும் என அரசாங்கம் உண்மையிலேயே விரும்பினால், மக்களை அலுவலகங்களுக்கு அங்கும் இங்குமாக அலையவிடாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை.
நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் மூவரின் பெயர்கள் மாத்திரமே மக்களுக்குத் தெரியும். ஏனைய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள்கூடப் பல மக்களுக்குத் தெரியாத நிலை காணப்படுகின்றது. இதுதான் மலையகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையாகும்.
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக உரிய முறையில் குரல் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அவ்வாறு பேசினாலும், நீங்கள் செய்தீர்கள், நாங்கள் செய்தோம் என்ற பரஸ்பர குற்றச்சாட்டுகளும் வாக்குவாதங்களுமே இடம்பெறுகின்றன.
மலையக மக்களிடையே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முன்வருபவர்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





